இம்பால்: மணிப்பூரில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. கொலை விவகாரம் தொடர்பாக 5 பெண்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மணிப்பூரின் கடந்த இரண்டு மாதங்களாக இரு குழுக்களுக்கு இடையே வன்முறை நடந்து வரும் நிலையில், இம்பால் கிழக்கு மாவட்டம் சவோம்புங் பகுதியில் 50 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் ஐந்து பெண்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையில் நாகா மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 12 மணி நேர கடையடைப்பு போராட்டம் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது.
மேலும் பெண் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் ஐக்கிய நாகா கவுன்சில் அமைப்பினர் மாநிலத்தின் மற்றப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மார்க்கெட்டுகள், கடைகள் மூடப்பட்டு இருந்தன. அரசு அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் வந்து இருந்தனர். இதற்கிடையே மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள லைமடன் தங்புஹ் கிராமத்தில் ஒரு சமூகத்தின் கிராம பாதுகாப்புப் படை மீது ஆயுதம் ஏந்திய ஆசாமிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். சுமார் 30 பேர் கொண்ட கிளர்ச்சிக்குழுவினர் ஒரு சிறிய மலையில் ஏறி கிராம பாதுகாப்புப் படை உறுப்பினர்களைத் தாக்கினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.