தேனி: தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இரவங்கலாறு, மேகமலை பகுதிகளில் பெய்த தொடர் மழையால் சுருளி அருவிக்கும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டுர் அணை நீர்மட்டம் 3வது நாளாக சரிந்துள்ளது. நேற்று வினாடிக்கு 4906 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் காலை முதல் அவை 3992 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் 102.88 அடியாக சரிந்துள்ளது.