மஞ்சூர்: மஞ்சூர் அருகே சூறாவளி காற்றில் சாய்ந்த மரங்களால் எடக்காடு-தங்காடு சாலையில் போக்குவத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழையுடன் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் மஞ்சூர், கிண்ணக்கொரை, கோரகுந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மழை ஓரளவு ஓய்ந்து போன நிலையில் மீண்டும் சூறாவளி காற்று வீசி வருகிறது. நேற்று பகல் எடக்காடு பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் சாலையோரம் இருந்த 3 மரங்கள் அடுத்தடுத்து சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது.
இதனால் மஞ்சூரில் இருந்து பிக்கட்டி மற்றும் எடக்காடு வழியாக தங்காடு பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருவழி தடங்களில் இருந்து சென்ற அரசு பஸ்கள் தனியார் வாகனங்கள் சம்பவ இடத்தின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றது. இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பெருமாள் மேற்பார்வையில் சாலை ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் சாலை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து, சாலையில் சாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.