*தந்தை சீரியஸ்; போக்குவரத்து பாதிப்பு
நல்லம்பள்ளி : தொப்பூர் கணவாயில் கார்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரு காரில் வந்த சேலத்தைச் சேர்ந்த பெண் பலியானார். அவரது தந்தை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் ஒருவழி பாதையாக மாற்றி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் இருந்து ரசாயன பவுடர் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோயம்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. சுரேஷ் (30) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று மதியம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கணவாய் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, திடீரென தறிகெட்டு ஓடியது. தொடர்ந்து தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
இந்த விபத்தில் ஒரு கார் சிறிது சேதமடைந்த நிலையில், மற்றொரு கார் அப்பளம் போல் ெநாறுங்கியது. அந்த காரில் வந்த சேலத்தைச் சேர்ந்த செல்வ லீலா (35) மற்றும் அவரது தந்தை துரைராஜ் (56) ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி பணியாளர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய லாரி டிரைவர் உட்பட 3 பேரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்து, செல்வ லீலா இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் துரைராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.