சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அதிகளவில் நேற்று தக்காளி வந்தது. இதனால், ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடந்த 8ம்தேதி 35 வாகனங்களில் 600 டன் தக்காளி வந்ததால் ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தக்காளியின் வரத்து அதிகரித்தது. நேற்று காலை மார்க்கெட்டுக்கு 38 வாகனங்களில் 700 டன் தக்காளி வந்தது. இதன் காரணமாக, ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளியை வாங்கி செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் பெண்கள், வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
மேலும் தக்காளியின் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பொதுமக்கள் தக்காளியின் விலை குறைந்துள்ளதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் மார்க்கெட்டில் தக்காளியின் விலை குறைந்துள்ளது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் கடும் முயற்சியால் தக்காளியின் விலை குறைந்துள்ளது. மேலும் படிப்படியாக விலை குறையும்’’ என்றார்.