கடலூர்: கடலூர் முதுநகரில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் அந்த கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலூரில் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ கேரட், பீன்ஸ், 100 ரூபாய் வரையிலும், கத்தரிக்காய் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி ரூ.110 வரை விற்பனை ஆனது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர். தக்காளி விலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்களும் போடப்பட்டு வந்தன.
மேலும் தக்காளி இல்லாமல் செய்யும் உணவு வகைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் இணையத்தில் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை கடலூர் முதுநகரில் உள்ள ஒரு காய்கறி கடையில் தக்காளி ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடலூர் முதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அந்த கடைக்கு கூட்டம் கூட்டமாக வந்து தக்காளியை வாங்கி சென்றனர். ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்பட்டது. தக்காளியை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியதால் 600 கிலோ தக்காளி, ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
தக்காளி வாங்க வந்த பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக தக்காளி விலை ரூ.100 வரை விற்றதால் சிரமம் அடைந்து வந்தோம். கிலோ ரூ.20க்கு விற்பனைக்கு செய்யப்படுகிறது என தகவல் கிடைத்ததும், எந்த வேலையையும் பொருட்படுத்தாமல் வாங்க வந்துவிட்டோம்’ என்றனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், ‘கர்நாடக மாநிலம் கோலார் என்ற பகுதியிலிருந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகிறோம். இறக்கு கூலியோடு சேர்த்து ஒரு கிலோவுக்கு ரூ.60 ஆகிறது. மக்களின் நலன் கருதி ஒரு கிலோவுக்கு ரூ.40 நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று ரூ.20க்கு தக்காளியை விற்றேன்’ என்றார்.