சென்னை: தக்காளி விலை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஏறத்தான் செய்யும் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: சிவில் சட்டம் குறித்து பொய் சொல்கின்றனர். ஜிஎஸ்டி வந்த பிறகு அனைத்து மாநிலங்களும் முன்னேறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தக்காளி, வெங்காயம் விலை ஏறும். பிறகு குறையும். ஒன்றிய அரசு மானியம் வழங்கி வருகிறது. கூடுதல் மானியம் கொடுத்து தக்காளி, வெங்காயம் விலையை குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆண்டு டெல்லி, அரியானா, பஞ்சாப், உ.பி, உத்தரகாண்ட் மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக அத்தியாவசிய காய்கறிகளின் விலை ஏறும். இன்னும் சில பிரச்னைகள் வரும். அதனை சமாளிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது. மாநில அரசும் தயாராக இருக்க வேண்டும். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அழைப்பை ஏற்று பிரிக்ஸ் அரசியல் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஆப்பிரிக்காவுக்கு செல்கிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இன்று தென்னாப்பிரிக்கா செல்கிறேன். வேறு எதுவும் காரணம் இல்லை என்றார்.