நாகர்கோவில்: நாடு முழுவதும் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்களில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.135க்கு விற்கப்பட்டது. தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் தக்காளி பற்றிய செய்திகளும், சுவாரஸ்யமான சம்பவங்களும் வைரலாக தொடங்கி உள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை கொண்ட பிரியாணி விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று ‘தக்காளி ஜாக்பாட்’ என்ற பெயரில் பக்கெட் பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம் என்ற ஆபரை கடந்த 14ம் தேதி அறிவித்தது.
5 நபர் சாப்பிட கூடிய பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம், 3 நபர் சாப்பிட கூடிய பக்கெட் பிரியாணி வாங்கினால் அரைகிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். இச்சலுகை தமிழகத்தில் உள்ள தங்களின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தனர். நாகர்கோவில் மட்டுமின்றி மன்னார்குடி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களிலும் இந்த ஆபர் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் ஒரு பக்கெட் பிரியாணி விலை என்ன என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. இருப்பினும் தக்காளி மீதான மோகத்தில் பலரும் பக்கெட் பிரியாணி வாங்கியதுடன் இலவசமாக தக்காளியையும் வாங்கி சென்றனர். தங்களுக்கு பிரியாணியுடன் தக்காளியும் கிடைத்ததால் வாடிக்கையாளர்கள் திக்குமுக்காடிபோயினர்.