இப்படித்தான் இரண்டு வாரங்களாக தக்காளியை நினைத்து தமிழகம் மட்டுமல்ல மொத்த தேசமும் தவிக்கிறது. ஊர்களில் கிலோ ரூ. 80, ரூ. 100 எனில் சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஒரு கிலோ ரூ.120-140 வரை விற்பனை. இதில் வட இந்திய மார்க்கெட்டுகளில் ரூ.200ஐ தொட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்குகிறது. அதீத மழை, வெள்ளம் காரணமாக விலையேற்றம் என்கிறார்கள். இதனாலேயே பல மீம்களும், டிரோல்களுமாக இணைய வெளியில் தக்காளி தகதகவென மின்னுகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் அஜய் என்கின்ற வியாபாரி தனது கடைகளில் இருந்து தக்காளிகளை திருடி செல்லாமல் இருக்கவும், வேண்டுமென்றே அங்கு நின்று பேரம் பேசுபவர்களை கலைத்து விடவும் இரு பவுன்சர்களை நியமித்துள்ளது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. சரி பவுன்சர்கள் வைக்கும் அளவுக்கு நமக்கும் வசதி இல்லாத பட்சத்தில் குறைந்த பட்சம் வாங்கியத் தக்காளியை எப்படி பாதுகாப்பது, எந்தெந்த சமையலில் எல்லாம் தக்காளியை தவிர்க்கலாம் . இதோ சில காஸ்ட்லீ டிப்ஸ் ஃபிரீட்ஜில், அதிக குளிர்ந்த நிலையில் வைப்பது மட்டுமே முதலும், முக்கியத்துவமும் வாய்ந்த பாதுகாப்பு வழி. பெரும்பாலும் அவியல்கள், பொரியல், கூட்டு, இவைகளுக்கு தக்காளி தேவைப்படாது. கூடுமானவரை அப்படியான சமையல்களை வீட்டில் அதிகரிக்கலாம். மேலும் இதனால் அதிக காய்கறிகள் சாப்பிடும் வழக்கமும் கூட வீட்டில் உண்டாகும்.
*தக்காளியை அப்படியே ஃபிரிட்ஜில் வைக்காமல் ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது இன்னும் சில காலங்கள் தக்காளியின் வாழ்நாள் நீடிக்கும்.
*ரசம் வைக்கும் போது புளி, எலுமிச்சை போன்றவை பயன்படுத்தலாம்.
*சாம்பாருக்கு வெறும் ஒரு தக்காளி பயன்படுத்திவிட்டு சாம்பார் நன்கு கொதி வந்த நிலையில் ஒரு எலுமிச்சை பிழிந்து இறக்க அதன் சுவை வித்யாசமாக இருக்கும்.
*பிரியாணிக்கு பெயருக்கு ஒரு தக்காளி சேர்த்துவிட்டு , உடன் தயிர் மற்றும், எலுமிச்சை சேர்க்கலாம்.
*தக்காளியை ஒரு கிலோ வாங்கும் தருவாயில் அதனை நன்கு வதக்கி, அரைத்து பேஸ்ட்டாக மாற்றி டப்பாக்களில் சேமித்து வைத்து சமையலில் அரை ஸ்பூன், கால் ஸ்பூன் வீதம் பயன்படுத்தலாம். சுவையும் கூடும், மேலும் *தக்காளியும் நீண்ட நாட்களுக்கு தாங்கும்.
*தக்காளி விதைகளைக் கூட விடாமல் அவற்றை வீட்டில் உள்ள தொட்டிகளில் இட்டு செடியாக வளர்க்கலாம். மேலும் தக்காளி பழம்தான் விலை அதிகம். தக்காளி விதைகள் விலை குறைவுதான் என்கிற நிலையில் மாடித் தோட்டங்கள் போட்டு தக்காளியை வீட்டிலேயே பயிரிடலாம்.
*தக்காளிச் சட்னி நினைத்துக் கூட பார்க்க முடியாது, எனினும் இம்மாதிரியான நேரங்களில் ஆசை வருவது இயல்பு. வெங்காயத்துடன் தக்காளி சாஸ்களைப் பயன்படுத்தினால் தக்காளி சட்னி அளவிற்கு சுவை கிடைக்காவிட்டாலும் ஓரளவிற்கு தக்காளி சட்னி சாப்பிட்ட திருப்திஉண்டாகும்.
– ஷாலினி நியூட்டன்