Thursday, February 29, 2024
Home » சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலையை சீரமைக்காமல் சுங்க கட்டணம்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போலீசில் புகார்

சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலையை சீரமைக்காமல் சுங்க கட்டணம்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போலீசில் புகார்

by Ranjith

புழல்: சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில், சாலையை சீரமைக்காமல் சுங்க கட்டணம் வசூல் செய்யும் திட்ட இயக்குநர், மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் யுவராஜ், செங்குன்றம் சுற்று வட்டார லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாலை சோழவரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இதில், சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இரு வழி சாலையாக உள்ள நிலையில், 4 வழி சாலையாக மாற்றுவதற்கான வரைவு திட்டம் கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் பெறப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை இத்திட்டம் செயல் வடிவம் பெறவில்லை. இதனால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சாலை சீர்கேட்டால் அடிக்கடி விபத்துகளும் அதனால் உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகிறது. 4 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றாமல் சென்னை மாதவரம் முதல் ஆந்திர மாநிலம் தடா வரை உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் முறைகேடாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் சுரண்டப்படுகிறது.

எனவே, 4 வழி சாலை திட்டத்தை செயல்படுத்தாமலும், தற்போதுள்ள சாலையை முறையாக பராமரிக்காமலும் சுங்க கட்டணம் வசூலிக்கும் ஒன்றிய சுங்க சாவடிகளின் திட்ட இயக்குனர் ஜனக்குமார், ஒப்பந்ததாரரான மேலாண்மை இயக்குனர் தீபக் மற்றும் செங்குன்றம் சுங்கச்சாவடி மேலாளர் ஆகிய மூவர் மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காகவும், மனித உயிர்களை காக்காமல் உயிர் இழப்புக்கு காரணமாக உள்ளதற்காகவும், பொது சொத்திற்கு பங்கம் விளைவிப்பது போன்ற குற்றத்திற்காகவும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

You may also like

Leave a Comment

19 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi