* இடம்மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகரின் அருகில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டோல்கேட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், சுமார் 50க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகள் இயங்கி வருகின்றன.
இதில், தமிழ்நாடு- கர்நாடகா மாநிலத்தை இணைக்க கூடிய கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி நகருக்கு அருகில் அமைந்துள்ள டோல்கேட், முக்கிய போக்குவரத்து கேந்திரமாக விளங்கி வருகிறது.
தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், இந்த டோல்கேட்டை கடந்து பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றன. அதேபோல், பெங்களூரு மற்றும் ஓசூர் மட்டுமின்றி, வட மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், இந்த டோல்கேட்டை கடந்து கிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன.
இந்த டோல்கேட்டானது கிருஷ்ணகிரி நகராட்சி எல்லை பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அங்கிருந்து சுமார் 500 மீ., தொலைவில், கலெக்டர் அலுவலகமும், எஸ்பி அலுவலகமும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் அமைந்துள்ளன.
கிருஷ்ணகிரியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், இந்த அலுவலகங்களுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். அப்போது, இந்த டோல்கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால், நாள் ஒன்றுக்கு பலமுறை கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதேபோல், கிருஷ்ணகிரியில் இருந்து போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் டாக்டர்கள், நோயாளிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், கிருஷ்ணகிரி நகரைச் சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பல்வேறு விவசாய பொருட்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விளை பொருட்களை கிருஷ்ணகிரி சந்தைக்கு கொண்டு வர டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
கிருஷ்ணகிரி நகரின் அருகாமையில் உள்ள கிராமத்திலிருந்து, விளை பொருட்களை கொண்டு வரும்போது, சுமார் ஒரு கி.மீ., தூரம் கூட சுங்க சாலையைப் பயன்படுத்தாத நிலையில், கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறுவதை ஏற்க முடியாது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பண்டிகை, விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் இந்த டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வாடிக்கையாக உள்ளது.
இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதால், குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாத நிலையும் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் அனைத்து தேவைகளுக்கும் தலைமை அலுவலகமாக செயல்படும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ள இடத்துக்கும், நகரில் உள்ள பஸ் நிலையத்துக்கும் இடையே இருக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.
எனவே, இந்த டோல்கேட்டை இடமாற்றம் செய்யவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. தேர்தலின் போது, அரசியல் கட்சியினரும் டோல்கேட்டை இடமாற்றம் செய்வதாக வாக்குறுதிகளாக கூறி வருகிறார்கள்.
எனவே, இந்த சுங்கச் சாவடியை குருபரப்பள்ளியை தாண்டி, சின்னாறு அருகில் இடமாற்றம் செய்ய மக்கள் பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.