உடுப்பி: கழிப்பறையில் ரகசிய கேமரா இருப்பதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறினார். உடுப்பியில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியில், கழிப்பறையில் இருந்த மாணவியை வீடியே எடுத்து, வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. இச்சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, உடுப்பியில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியில் நேற்று விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கழிப்பறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளது என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். பரவும் பொய்யான வீடியோக்களை நம்ப வேண்டாம், ரகசிய கேமரா இல்லாத கல்வி மையம் இது, காவல்துறையினருடன் இணைந்து தகவல்களை சேகரித்து வருகிறோம், காவல்துறையின் ஒத்துழைப்புடன் எங்களது விசாரணை தொடரும் என்றார்.