தாம்பரம்: குளிப்பது, பல் துலக்குவது போலவே கை கழுவுவதும் நம் தினசரி உடல் சுகாதாரத்தில் மிக முக்கியமானது. இதை கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலுக்கு பின்னர் பலரும் நேரடியாக உணர்ந்தனர். தற்போது பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துவிட்டாலும் கை கழுவும் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றச் சொல்லி நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே இன்று உலக கைகழுவுதல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
நாம் நமது அன்றாட வாழ்வில் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். பல்வேறு பொருட்களை தொடுகிறோம். அவற்றில் ஏராளமான கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த கிருமிகள் மற்றவர்களுக்கு எளிதில் பரவி, அதன் மூலம் நோய்கள் பரவுவதற்கு அவை வழிவகுக்கும். இதை தடுக்க நேரடியான மற்றும் மிகவும் சிறந்த வழி கைகளை கழுவுவது ஆகும். பொதுமக்களும் கை கழுவுவதில் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொண்டு தொடர்ந்து அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்கின்றனர். ஆனாலும் சிலர் அதில் முக்கியத்துவம் கொடுக்காமல் சுகாதாரமற்ற முறையில் இருந்து வருகின்றனர். எனவே கை கழுவுவதினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கைகளை கழுவாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கை கழுவுவதில் முக்கியத்துவம் குறித்து சென்னை, கொட்டிவாக்கத்தில் உள்ள புரோமெட் மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் கூறுகையில், இந்த நாள் கை கழுவுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்கான நடைமுறைகளை எடுத்துரைப்பதற்கான நாளாகவும் உள்ளது. இந்த ஆண்டு சுத்தமான கைகள் எட்டும் தூரத்தில் உள்ளன என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு கை கழுவுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சமீப காலமாக கைகளை கழுவுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், அதனால் கிடைத்த நன்மைகள் குறித்தும் இது விளக்குவதோடு, கைகளை சுத்தமாக வைத்திருக்க ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தையும் இது வலியுறுத்துகிறது. நோய் கிருமிகள் பரவுவதில் கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த கிருமிகள் தரையின் மேற்பரப்புகள், காற்று மற்றும் கைகளிலும் இருக்கின்றன. நாம் நம் முகங்களையோ அல்லது பிற பொருட்களையோ தொடும்போது, நம்மை அறியாமலே இந்த கிருமிகள் நம்மிடையே பரவுகின்றன. இதனால் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தொடர்ந்து கைகளை நாம் கழுவும்போது, நம் கைகளில் உள்ள கிருமிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைவதோடு, நோய் அபாயமும் குறைய வாய்ப்பு உள்ளது. கிருமிகள் பரவுவதைக் குறைப்பதற்கு முறையாக கைகளை கழுவுதல் என்பது மிகவும் அவசியம். சுத்தமான தண்ணீரில் உங்கள் கைகளை நன்றாக கழுவி அதன் பின் சோப்பை பயன்படுத்துங்கள். நுரை வரும் வரை கைகளை தேயுங்கள், உங்களின் விரல் இடுக்குகள் மற்றும் நகங்களுக்கு இடையே சோப்பு நுரை செல்லும் வகையில் நன்றாக கைகளை தேயுங்கள். 20 நொடிகள் உங்கள் கைகளை நன்றாக தேயுங்கள், அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் உங்கள் கைகளை நன்றாக கழுவுங்கள். பின்னர் தூய்மையான துண்டை கொண்டு கைகளின் ஈரம் போகும் வரை நன்றாக துடைக்கவும். கிருமிகள் பரவாமல் தடுக்க குறிப்பிட்ட நேரத்தில் கைகளை கழுவுவது மிகவும் முக்கியம். கைகளை கழுவுவதை ஒரு வழக்கமான நடைமுறையாக்கி, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நிலைைய ஏற்படுத்த வேண்டும். எனவே குறைந்தது 20 வினாடிகள் சோப்பு மற்றும் தண்ணீரால் உங்கள் கைகளை நன்றாக கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* சக்திவாய்ந்த வழிமுறை
விலங்குகளை தொட்டாலோ அல்லது அவை பயன்படுத்திய பொருட்களை தொடும்போது, அவற்றில் கிருமிகள் இருக்கும். எனவே அப்போது கைகளை நன்றாக கழுவ வேண்டும். குப்பை பைகளை கொண்டு சென்று போட்ட பிறகு கைகளை நன்றாக கழுவ வேண்டும். வெட்டுக் காயங்கள் மற்றும் புண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன் மற்றும் பின் கைகளை கழுவ வேண்டும். கைகழுவுதல் என்பது நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கான நேரடியான ஆனால் மிகவும் சக்திவாய்ந்த ஒரு வழி முறையாகும்.
* கிருமி பரவுவதை தடுக்கலாம்
உணவு சமைப்பதற்கு முன் மற்றும் பின் இரு முறையும் நன்றாக கைகளை கழுவ வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு முன் உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். கழிவறைக்கு சென்று வந்த அல்லது டயாப்பர் மாற்றிய பிறகு கைகளை நன்றாக கழுவ வேண்டும். இது தனிப்பட்ட சுகாதாரத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். இருமல், சளி அல்லது தும்மல் ஏற்படும்போது, அதற்கு பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும். நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொண்ட பிறகு உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க கைகளை கழுவ வேண்டும்.