சென்னை: நாடு முழுவதும் இன்று முதுநிலை நீட் தேர்வு நடக்கிறது. தமிழ்நாட்டில் 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இளநிலை மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வினால் ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு சிதைந்து போகிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் இந்த கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்ப்பது இல்லை. இதுவரை இல்லாத அளவுக்கு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. தவறுகள் நடந்ததை ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டது. இது ஒருபக்கம் என்றால் முதுநிலை நீட் தேர்விலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வுக்காக 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால், இந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.
பின்னர் இந்த தேர்வு ஆகஸ்டு 11ம் தேதி (இன்று) காலை மற்றும் பிற்பகல் என 2 பிரிவுகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டன. இதில் பலருக்கும் நீண்ட தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக ஒரு மாநிலத்தை சேர்ந்த மாணவருக்கு மற்றொரு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்து உள்ளது. தமிழக தேர்வர்களில் 75 சதவீதத்தினருக்கு தமிழகத்தில் அவர்கள் கேட்ட தேர்வு மையங்களில் ஒன்றை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் மறு ஒதுக்கீடு செய்தது. எனினும், 25 சதவீத தேர்வர்களுக்கு 1,000 கி.மீ தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தநிலையில், நீட் முதுநிலை தேர்வு இன்று நாடு முழுவதும் 185 நகரங்களில் 500 மையங்களில் நடைபெற்று வருகிறது.
இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் இந்த தேர்வில், முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. 2வது ஷிப்ட் தேர்வு பிற்பகல் 3.30 முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. கணினி வழியில் நடக்கும் இந்த தேர்வை எழுத தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஹால்டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய ஐடிகார்டு, என்.எம்.சி பதிவு நகல் ஆகியவற்றை மட்டுமே எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படும். முதல் ஷிப்ட் தேர்வுக்கு 8.30 மணிக்கு முன்பாக தேர்வர்கள் சென்றுவிட வேண்டும். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகளுக்கு அனுமதி கிடையாது. உணவுபொருட்களையும் எடுத்து செல்லக் கூடாது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.