நுரையீரல், குரல்வளை, வாய், உணவுக்குழாய், தொண்டை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம், கருப்பை வாய் உள்ளிட்ட பல்வேறு வகை புற்று நோய்களுக்கு புகையிலை பொருட்களே முக்கிய காரணம். எனவே புகையிலை பொருட்கள் நுகர்வதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் மே 31ம் தேதி (இன்று) உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள், 1987ம் ஆண்டு முதல் இந்தநாளை அனுசரித்து வருகிறது. நடப்பாண்டில் ‘நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல’ என்ற பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி ஒன்றிய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறைகளும், தன்னார்வ அமைப்புகளும் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வகையில் இன்று நடக்கும் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர், புகையிலை பொருட்களை நுகர்வதால் புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், வாய்புற்று நோய், நாள்பட்ட நுரையீரல் நோய், மற்றும் புற நோய்களால் இறக்கின்றனர். அவர்களில் 13.5 லட்சம் பேர் இந்தியர்களாக உள்ளனர்.
ஹெச்ஐவி, காசநோய், வாகன விபத்து, தற்கொலை போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட, புகையிலை பொருட்களால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம். நீடித்த பயனுள்ள முன்முயற்சிகள் செயல்படுத்தவில்லை என்றால் 2025ம் ஆண்டில் பெரும் அபாயங்களை சந்திக்க நேரிடும். இதேபோல் சமீபகாலமாக பெண்கள், புகையிலை பொருட்களை உபயோகிப்பதும் அதிகரித்து வருகிறது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் 20 சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் கர்ப்பகால பிரச்னைகள், மார்பக புற்றுநோய், கர்ப்பபை வாய் புற்றுநோய் போன்ற ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் கூறியதாவது: பீடி, சிகரெட், குட்கா, பான்மசாலா என்று பல்வேறு பெயர்களில் புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரில் 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 20 சதவீதம் பேர். 25 வயது முதல் 40வயதுக்கு உட்பட்டவர்கள் 40 சதவீதம் பேர். இந்தப்புள்ளி விபரமே இளைய தலைமுறையிடம் புகையிலை பொருட்களின் தாக்கமும், பயன்பாடும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை சொல்லிவிடுகிறது.
புகையிலை பொருட்கள் அனைத்தும் அபாயம் நிறைந்தவை. பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்தே, பெரும்பாலானவர்கள் அதை பயன்படுத்துகின்றனர் என்பது வேதனைக்குரியது. குறிப்பாக புகையிலை பொருளான சிகரெட் பிடிப்பதில் ஏழைகள் முதல், பணக்காரர்கள் வரை அனைவரின் கண்ணோட்டமும் ஒரே மாதிரி தான் உள்ளது. புத்துணர்வுக்காக புகைக்கிறோம் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகளவில் தினமும் 70 கோடி பேர் புகை பிடிக்கின்றனர். இவர்களில் ஆண்டுக்கு 60 லட்சம் பேர், நோய்களால் பாதித்து உயிரிழக்கின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை 50 சதவீதம் பேர் புகை பிடிக்கின்றனர். இவர்களில் ஆண்டுதோறும் 13 சதவீதம் பேர், இறப்பை தழுவுகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் புகைபிடிக்கும் போது உள்ளே இழுக்கும் புகையை விட, வௌியே விடும் புகையே அதிகம் உள்ளது. இதனால் புகைபிடிப்பவர் மட்டுமின்றி அருகில் உள்ளவர்களும் பாதிக்கும் நிலை இருக்கிறது. புகைபிடிப்பதால் உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிகரெட்டில் 12 மி.கி அளவு நிகோடின் உள்ளது. இதுவே பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. எனவே இதை கருத்தில் கொண்டு நடப்பாண்டு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
* உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகளவில் தினமும் 70 கோடி பேர் புகை பிடிக்கின்றனர்.
* இவர்களில் ஆண்டுக்கு 60 லட்சம் பேர், நோய்களால் பாதித்து உயிரிழக்கின்றனர்.
* இந்தியாவில் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரில் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 20 சதவீதம் பேர். 25 முதல் 40வயதுக்கு உட்பட்டவர்கள் 40 சதவீதம் பேர்.
* நடவடிக்கையால் கட்டுப்படுத்தலாம்
‘‘தமிழகத்தில் சினிமா, டிவி சீரியல்களில் புகைபிடிக்கும் காட்சிகளை முற்றிலும் தடைசெய்யவேண்டும். இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர் திரையில் புகைப்பதை பார்த்தே, அதில் ஈர்க்கப்படுகின்றனர். அதேபோல் புகையிலை பொருட்களுக்கு அதிக வரிவிதித்தல், பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். புகையிலை விவசாயிகளை நிலையான மற்றும் மாற்றுப்பயிர்களுக்கு மாற்ற ஊக்குவிக்கலாம். பள்ளி கல்லூரி அளவில் இருந்தே புகையிலையின் பாதிப்புகள் பற்றி தௌிவாக எடுத்துரைக்கலாம்’’ என்பதும் தன்னார்வலர்கள் வெளியிட்டுள்ள தகவல்.