புதுடெல்லி: உலக கோப்பை தொடரில் இன்று டெல்லியில் நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. 5 முறை உலக சாம்பியன் என்ற பெருமை ஆவியாகி… இது வெறும் காலிப் பெருங்காய டப்பாவோ! என்ற சந்தேகம் எழும் அளவுக்கு நடப்பு தொடரில் சற்று தடுமாறி வருகிறது ஆஸ்திரேலியா. இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி. 2 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பில் நீடித்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வென்றால் மட்டுமே அது சாத்தியம் என்ற நெருக்கடியில் அந்த அணி சிக்கியுள்ளது. எனினும், தொடக்க வீரர்கள் வார்னர், மார்ஷ் நல்ல ஃபார்மில் இருப்பது ஆஸி. அணிக்கு தெம்பை கொடுத்துள்ளது.
மற்ற பேட்ஸ்மேன்களும் கணிசமாக ரன் குவித்தால் நெதர்லாந்து சவாலை சமாளிக்கலாம். அதே சமயம், கொஞ்சம் அசந்தாலும் அதிர்ச்சி தோல்வியை பரிசளிக்கக் காத்திருக்கிறது நெதர்லாந்து. 4 போட்டியில் 3 தோல்வியை சந்தித்தாலும், வலுவான தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து வீரர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆஸி. பந்துவீச்சுக்கு எதிராக கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், சைப்ரண்ட், வான் பீக் அதிரடி எடுபடுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் நெதர்லாந்து எந்தவித நெருக்கடியும் இல்லாமல் களமிறங்கும் நிலையில், முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா? ருத்ரதாண்டவம் ஆடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
* இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளதில், ஆஸி. 2-0 என முன்னிலை வகிக்கிறது.
* இந்த 2 மோதல்களும் உலக கோப்பை தொடர்களில்தான் நிகழ்ந்துள்ளன.
* தென் ஆப்ரிக்காவில் (2003) நடந்த உலக கோப்பை போட்டியில் 75 ரன் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீசில் (2007) நடந்த போட்டியில் 229 ரன் வித்தியாசத்திலும் ஆஸி. வென்றது.
* டெல்லியில் நெதர்லாந்து 2 முறை விளையாடி உள்ளது (2011 உலக கோப்பை). அவற்றில் வெஸ்ட் இண்டீசிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தியாவிடம் 5 விக்கெட் வித்தியாச்திலும் தோற்றது.
* டெல்லியில் 6 முறை விளையாடியுள்ள ஆஸி. 3 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.
* இந்த அரங்கில் நடந்த 29 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி 14 முறையும், சேஸ் செய்த அணி 15 முறையும் வென்றுள்ளன.
ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்கள்), டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், ஷான் அப்பாட், கேமரான் கிரீன், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜோஷ் ஹேசல்வுட், ஆஷ்டன் ஏகார், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸம்பா.
நெதர்லாந்து: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), வெஸ்லி பர்ரேசி, மேக்ஸ் ஓ‘தாவுத், விக்ரம்ஜித் சிங், கோலின் ஆக்கர்மேன், பாஸ் டி லீட், சைப்ரண்ட் எங்கெல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, சாகிப் ஸுல்பிகர், வாண்டெர் மெர்வ், ஆர்யன் தத், ரயன் கிளெய்ன், ஷாரிஸ் அகமத், லோகன் வான் பீக், பால் வான் மீகரன்.