சிதம்பரம்: சிதம்பரத்தில் இருந்து கவரப்பட்டு செல்லும் பாலத்தில் தடுப்பு கட்டைகள் உடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. இவைகளை சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிதம்பரத்திலிருந்து ஆட்டோ நகர் வழியாக செல்லும் சாலையில் தடுப்பு கட்டைகள் உடைந்து பல மாதங்களாக சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால் இச்சாலை வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனம், கார், ஆட்டோ, வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது மிகவும் பாதுகாப்பற்ற பயணத்திலேயே சென்று வருகின்றனர். அதேபோல் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலக பணிக்கு செல்பவர்கள், அவசர தேவைகளுக்கு மருத்துவமனைக்கு செல்பவர்கள், குறிப்பாக இரவு நேரங்களில் இச்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். எனவே இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நலன் கருதி, உடனடியாக இச்சாலையில் பாலத்தின் தடுப்பு கட்டைகளை மீண்டும் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.