நன்றி குங்குமம் தோழி
பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும் போது சரியான பராமரிப்பு இல்லாததே காரணமாகும். படுக்கும் முன் கூந்தலை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
*தினமும் படுக்கும் முன் 5-10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும்.
*படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம்.
*இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் எண்ணெய் தலையுடன் வெளியே செல்ல முடியாது. ஆகவே அப்போது இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டு மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம். கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு வளரும். ஏனெனில் கூந்தலில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், கூந்தல் வளர்ச்சியடையும்.
*இரவு படுக்கும் முன் கூந்தலை நன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். அதனால் கூந்தலானது அதிகம் உடையாது மற்றும் உதிரவும் செய்யாது.
*நீண்ட கூந்தலை உடையவர்கள் கூந்தலின் முனையை மறக்காமல் துணியால் சுற்றிக் கொண்டு படுக்கலாம். அவ்வாறு செய்வதால் கூந்தலின் முனைகள் சிக்கு அடையாமல், முடிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும். மேலும் கூந்தலின் முனைகள் வெடிக்காமலும் இருக்கும்.
இவ்வாறெல்லாம் கூந்தலை இரவில் பராமரித்து பாருங்கள், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு, உடலும் ஆரோக்கியம் அடையும். மேலும் டென்ஷன், தலைவலி, மன அழுத்தம் போன்றவையும் இல்லாமல் உடலானது நன்றாக இருக்கும்.
தொகுப்பு : – பா.கவிதா, சிதம்பரம்.