Friday, September 13, 2024
Home » முதலீடுகளை ஈர்க்க 19 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டார்: உலகின் முன்னணி தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார்

முதலீடுகளை ஈர்க்க 19 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டார்: உலகின் முன்னணி தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார்

by MuthuKumar

சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 19 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10.17 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து சான்பிரான்சிஸ்கோ செல்கிறார். தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்கு சிறகு விரிக்கிறேன் என்று முதல்வர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க நேற்று இரவு 10.17 மணிக்கு சென்னையில் இருந்து எமிரேட்ஸ் பயணிகள் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அவரை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். அமெரிக்காவில் 19 நாட்கள் பயணம் முடிந்து செப்டம்பர் 14ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது வெளிநாடு பயணம் குறித்து தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மனித இனத்திற்கு சிறகுகள் போல முளைத்தன அறிவியலின் அற்புத கண்டுபிடிப்புகளில் ஒன்றான விமானம் என்கிற வானூர்தி. மனிதகுலம் பல நாடுகளுக்கும் பறக்க தொடங்கியது. தனிப்பட்ட மகிழ்ச்சிக்கான பயணங்கள் உண்டு. வேலை தேடி பல நாடுகளுக்கும் பறப்பவர்கள் உண்டு. அலுவல் சார்ந்த சந்திப்புகளுக்கான பயணங்கள் உண்டு. அன்னை நிலம் பயன் பெறுவதற்கான பயணங்களில் ஒன்றாக, உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்கு பயணிக்கிறேன்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் தேங்கி கிடந்த தொழில்வளர்ச்சியை மீட்டெடுத்து, அதற்கேற்ற வகையில் முதலீடுகளை ஈர்த்து, புதிய தொழிற்கட்டமைப்புகள் வாயிலாக, மாநிலத்தில் பரவலான அளவில் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நமது திராவிட மாடல் அரசு நிர்ணயித்து, அதற்கான பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறது.
அந்த முனைப்பின் தொடர்ச்சியாகத்தான், தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்கு பயணிக்கிறேன்.

தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு நம் மாநிலத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் புகழும் தரமும் மிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதன் வாயிலாக கடந்த 3 ஆண்டுகளில் ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துகிற வகையில், ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு, அவற்றை முறையாக கண்காணித்து, தொழிற்சாலைகளை தொடங்கி, வேலைவாய்ப்பு அமைக்கும் பணியையும் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் மட்டும் ₹17,616 கோடி மதிப்பிலான 19 நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், ₹51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான வின்பாஸ்ட் மின்வாகன நிறுவனம் தனது தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவை ஏற்கனவே என் தலைமையில் தூத்துக்குடியில் நடத்தி, பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.

பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டுள்ளன. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடனான பயணத்தில் மற்றொரு கட்டம்தான், உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளும் இந்த அமெரிக்க பயணம். நாளை (ஆகஸ்டு 29ம் தேதி) சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆகஸ்ட் 31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்துப் பேசுகிறேன். அதன்பின், செப்டம்பர் 2ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறேன். 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்கிறேன். ‘பார்ச்சூன் 500’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து உரையாட இருக்கிறேன்.

தொழில் முதலீடு சார்ந்த பயணம் என்றாலும், அமெரிக்காவாழ் தமிழர்களுக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கித்தராமல் இருக்க முடியுமா? செப்டம்பர் 7ம் தேதி சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது. நேற்று (ஆகஸ்டு 27) தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்த பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு பயன் தருவதாக இருக்க வேண்டும் என்பதுதான். இந்த குறுகிய இடைவெளியில், தமிழ்நாடு அரசின் நிர்வாக பணிகள் தொய்வின்றி தொடரவும், மக்கள் நலன் சார்ந்து திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் பயன்கள் தொடர்ந்து கிடைத்திடவும் அமைச்சர்களும், அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மாநில அளவிலான பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் செப்டம்பர் 17ம் நாள் நடைபெறவுள்ள கழகத்தின் பவளவிழா ஆண்டின் முப்பெரும் விழாவை எழுச்சியுடன் நடத்திடுவதற்கான பணிகளை இப்போதே தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

முதல்வர் அயல்நாடு சென்றிருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தவொரு பணியும் தடைபடாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்கு பெருமை சேர்ப்பதாகும். அந்த சான்றிதழை அமைச்சர்களும், கழக நிர்வாகிகளும் பெற்று தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன். ஆட்சிப் பணியும், கட்சிப் பணியும் தொய்வின்றி தொடர்வதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையினை கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். நம் மீது விமர்சனம் செய்ய விரும்புவோர், விவாதம் நடத்துவோர் ஆகியோருக்கு ஆட்சியிலும், கட்சியிலும் நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும்.

வார்த்தைகளால் பதில் சொல்லி அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வாய்ப்பை உருவாக்கி தர வேண்டியதில்லை. உங்கள் மீது நிறைந்த நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். பணிகளை கண்காணிப்பேன். என் உணர்வுகளை கடிதம் வாயிலாகவும் காணொலிகளாகவும் பகிர்ந்து கொள்வேன். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும். பார்வை கண்காணிக்கும். தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்கு சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

43 ஆண்டுகளுக்கு பிறகு கலைஞர் வரலாற்று நினைவுடன்…
1971ம் ஆண்டு நம் உயிர்நிகர் தலைவர் – தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கலைஞர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் மண்டபத்தில் அரிய உரை நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருடைய மனசாட்சியான முரசொலி மாறனும் அந்த பயணத்தில் உடன் சென்றிருந்தார். அதன்பின், நியூயார்க் நகருக்கு சென்று அங்கு தமிழ் மன்றத்தை தொடங்கி வைத்தார் கலைஞர். அந்த வரலாற்று சிறப்புமிக்க நினைவுகளுடன், ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ்நாட்டின் முதல்வர் அதுவும் திமுக சார்பில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்திப்பது எனக்கும் அவர்களுக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அமெரிக்க பயண திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக தொழில்-முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்கூட்டியே அங்கு சென்று ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் என்று முதல்வர் கூறியுள்ளார்.

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மரியாதை
அமெரிக்கா செல்வதை முன்னிட்டு நேற்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, எம்பி கனிமொழி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

You may also like

Leave a Comment

16 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi