சென்னை: உள்ளாட்சிகளில் உள்ள 2,534 பணிகளை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2,534 தொடக்க நிலை பணிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல், நகராட்சி நிர்வாகத்துறை மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டிய போட்டித் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறையே நடத்துவதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிகளில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், அப்பணிகளுக்கான ஆள்தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு, தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதன்படி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு 2,534 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகவே நடத்த வேண்டும். இந்த பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.