சென்னை: டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கா.பாலச்சந்திரனின் பதவிக்காலம் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து உறுப்பினராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ச.முனியநாதன் டிஎன்பிஎஸ்சியின் பொறுப்பு தலைவராக நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். அதேநேரத்தில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு, முன்னாள் போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால் இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சிக்கு தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன.
அதே நேரத்தில் டிஎன்பிஎஸ்சியில் காலியாக உறுப்பினர் பணியிடத்தில் 5 பேர் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி நியமிக்கப்பட்டனர். அதாவது, முன்னாள் ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரி ம.ப.சிவன்அருள், ஓய்வு பெற்ற இந்திய வருவாய் பணி அதிகாரி இரா.சரவணகுமார், டாக்டர் அ.தவமணி, உஷாசுகுமார், பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சிக்கு தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட உத்தரவில், டிஎன்பிஎஸ்சியின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்படுகிறார். அவர் பதவியேற்ற நாளில் இருந்து அடுத்த 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை தலைவர் பதவியில் நீடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.பிரபாகர், தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாகத் துறை ஆணையராக கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வருகிறார்.
இதுவரை டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். முதல்முறையாக தற்போது பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்.கே.பிரபாகர் 1989ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம்.
கலைஞர் முதல்வராக இருந்த போது முதலமைச்சரின் செயலாளராக இருந்தார். தகவல் தொழில்நுட்பவியல், வணிகவரித்துறை செயலாளர் மற்றும் ஆணையர், பொதுப்பணித்துறை செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர், உள்துறை செயலாளர், வருவாய் நிர்வாக துறை ஆணையர் என பல்வேறு துறைகளின் பொறுப்புகளை வகித்தவர். இவர் 2026 ஜனவரியில் ஓய்வு பெறுவதாக இருந்தார். இவர் ஓய்வு பெறுவதற்கு 16 மாதங்கள் உள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.