சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டவர்கள் உட்பட 181 நபர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கி தரவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல முன்னோடி திட்டங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது 113 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. எதிர்வரும் 2025-26ம் கல்வி ஆண்டில் மேலும் 19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படவுள்ளன.
துறையில் உள்ள காலி பணியிடங்கள் பூர்த்தி செய்திட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் – 4 தேர்வின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கு தேர்வு செய்யப்பட்டு வேலைவாய்ப்பு பிரிவில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட 9 சுருக்கெழுத்து தட்டச்சர்கள், 19 இளநிலை உதவியாளர்கள், 21 தட்டச்சர்கள் மற்றும் பயிற்சிப் பிரிவில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட 1 சுருக்கெழுத்து தட்டச்சர், 82 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 42 தட்டச்சர்கள் என மொத்தம் 174 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 7 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் வழங்கினார்.
மேலும், 2023-24ம் ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் உட்பட 12 அலுவலர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளையும் அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் வீர ராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் விஷ்ணு சந்திரன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.