சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்துள்ளனர். வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வரும் எஸ்.கே.பிரபாகர், டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியிட்டனர்.
டிஎன்பிஎஸ்சிக்கு புதிதாக 9 உறுப்பினர்கள் கடந்த பிப். மாதம் நியமிக்கப்பட்ட நிலையில் தலைவரும் நியமித்துள்ளனர். முன்னதாக டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை அரசு பரிந்துரை செய்தது. அரசு பரிந்துரைத்த டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை ஆளுநர் ரவி பரிசீலிக்காமல் இருந்து வந்தார். இது குறித்துச் சில விளக்கங்கள் தமிழக அரசிடம் கேட்டிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி டி.என்.பி.எஸ்.சி அமைப்பு ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். இவர்கள் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு, ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். 1989-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர், பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயதை அடையும் வரை பதவி வகிப்பார். இதன் மூலம் TNPSC தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகர் 2028 ஜனவரி மாதம் இறுதி வரை பதவி வகிப்பார் என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.