சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான கூடுதல் காலி பணியிடங்கள் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே 2540 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரக்கூடிய நிலையில் தற்போது கூடுதலாக இந்த தேர்வுகளில் 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் சார்பில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும், கோரிக்கைகளின் அடிப்படையில் பணியிடங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
உதவி ஆய்வாளர், துணை வணிகவியல் அலுவலர், சார்பதிவாளர் நிலை 2 தனிபிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக தற்பொழுது 213 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் பல்வேறு தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெறும் போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி இடங்களுடன் கூடுதலாக சில காலி இடங்கள் சேர்க்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.