சென்னை: காளான் வளர்த்தல் மற்றும் பயிரிடுதலை வேளாண் தொழிலின் கீழ் சேர்த்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ஊட்டச்சத்துகள் நிறைந்த உண்ணக்கூடிய வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் போன்ற காளான் வகைகளின் வளர்ப்பானது வேளாண் செயல்பாடாக அறிவிக்கை செய்யப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பேரவையில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வகைப்படுத்தப்படாமல் இருந்த காளான் வளர்ப்பை வேளாண் உற்பத்தி தொழிலில் சேர்க்கப்பட்டுள்ளது. புரதச்சத்து நிறைந்த உணவாக தற்போது காளான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. காளான் உற்பத்தி தொழிலை விரிவாக்கும் நோக்கில் தற்போது இந்த நடவடிக்கை தமிழக அரசால் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அரசிதழில் கூறியிருப்பதாவது:
வெள்ளை மொட்டுக் காளான் (பட்டன் மஷ்ரூம்), பால் காளான் (மில்கி மஷ்ரூம்), சிப்பிக்காளான் ( ஆய்ஸ்டர் மஷ்ரூம்) மற்றும் இதர உணவாக எடுத்துக் கொள்ளத்தக்க வகையிலான காளான்கள் பயிரிடுதல் மற்றும் வளர்த்தல் ஆகியவை தமிழகத்தில் வேளாண் செயல்பாடுகளின் கீழ் வகைப்படுத்தி அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விவசாயிகள், காளான் வளர்ப்போர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலமற்ற விவசாயிகளும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய, மாநில, வேளாண், வேளாண் சார் அமைப்புகள் நடத்திய ஆய்வில், காளான் வகைகள் காய்கறிகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.