சென்னை: புயல், ெவள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சமாளிக்க சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நகரமயமாக்கல், நகர விரிவாக்கம் காரணமாக கடலை ஒட்டிய தாழ்வான பகுதிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பல குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன. தாழ்வான பகுதிகளில் போதிய விழிப்புணர்வு இன்றி ஏராளாமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், 2015ம் ஆண்டு வெள்ளம் போல, பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல வெள்ளங்களை சந்தித்தும், அதிலிருந்து கற்றுக் கொள்ளாமல், அடையாறு போன்ற பகுதிகளில், ஆற்றின் கரையோரம் பல கட்டிங்கள் உருவாகி உள்ளது. மேலும் நாட்டின் பல நகரங்களைப் போலவே, சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்கு பல காரணங்கள் உள்ளன. இது சில ஆண்டுகளாக இன்னும் மோசம் அடைந்துள்ளது. இந்த பிரச்சனைகள் களையப்படவில்லை எனில், அடுத்த எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வெள்ள பாதிப்பை தடுக்க முடியாது.
இந்நிலையில், பழைய இயல்பு நிலைமைக்கு மீண்டும் திரும்புவது என்பது முற்றிலும் சாத்தியமற்றது. இருப்பினும் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மழைநீரை வெளியேற்ற மழை நீர் வடிகால் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தினாலும், சென்னையில் நிலப்பரப்பும், கடலின் நீர் மட்டமும் சமமாக இருப்பதால் வெள்ள நீர் உடனடியாக வெளியேற்றுவது என்பது சவாலான ஒன்றாகவே உள்ளது. இதனால் ஒவ்வொரு முறை கனமழை கொட்டும்போதும், வீடுகள் வெள்ளக்காடுகளாக மாறுகின்றன. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வரமுடியாமல் மக்கள் வீடுகளிலேயெ முடங்கிவிடுகின்றனர். மழை வெள்ளம் செல்ல வேண்டிய பாதைகளையும் குடியிருப்புகள் அடைத்து இருப்பதால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த காட்சிகளை சென்னையில் காண முடிகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற காலங்களில், சென்னையில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய முயற்சியாக பிரத்யேகமாக தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆணையமானது சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையின் கீழ் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், நல அலுவர், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி, நீர்வளத்துறை பொறியாளர் ஆகியோர் அடங்கிய ஆணையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, பேரிடர் மேலாண்மை சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன், உள்ளூர் நகர்ப்புறங்களுக்கு ஏற்ப தனி ஆணையங்களை உருவாக்க அனுமதிக்கிறது. சென்னை வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளதால், புயல், வெள்ளம், மற்றும் கனமழை போன்ற இயற்கை பேரிடர்களுக்கு ஆளாகிறது.
காலநிலை மாற்றத்தால் இத்தகைய பேரிடர்களின் தாக்கம் மற்றும் அதிர்வெண் அதிகரித்து வருவதால், சென்னையில் பேரிடர் மேலாண்மையை மேம்படுத்துவதற்கு ஒரு தனி ஆணையத்தின் தேவை உணரப்பட்டது. இந்த ஆணையம், பேரிடர் அபாயங்களைக் குறைப்பது, முன்னேற்பாடுகளை மேற்கொள்வது, பேரிடர் ஏற்பட்டவுடன் விரைவாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சென்னை மாநாகராட்சிக்காக அமைக்கப்பட்டுள்ள, ஆணையம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் சிரமங்களை போக்க உதவும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.