சென்னை: தமிழ்நாடு மின்வாரிய பணியாளர் கூட்டமைப்பு நிர்வாகிகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் கூட்டமைப்பு தலைவராக தனசேகர், பொதுச்செயலாளராக மூர்த்தி, பொருளாளராக அருள்தாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த மார்ச் 12ம் தேதியுடன் நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், தேர்தல் நடத்தும்படி தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஆனால், மாநில பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டாததால், துணைத்தலைவர் தலைமையில் 2024 மே 26ம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு புதிய தலைவராக ஷாஜகான் என்பவரும், சம்பத் என்பவர் பொதுச்செயலாளராகவும், ராமச்சந்திரன் என்பவர் பொருளாளராகவும் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில், ஏற்கனவே பொதுச்செயலாளர் பதவி வகித்த மூர்த்தி என்பவர் 2024 ஜூன் 3ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி புதிதாக தேர்ந்தெடுத்ததாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் தேர்தல் செல்லாது என்று அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, தங்கள் செயல்பாட்டில் தலையிட பழைய நிர்வாகிகளுக்கு தடை விதிக்க கோரியும், தங்கள் தேர்தலை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரியும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், கூட்டமைப்பின் சட்ட திட்டங்களில் குறைபாடுகள் உள்ளதால் இருதரப்பினரும் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நிர்வாகியாக நியமிக்கப்படுகிறார் என்று உத்தரவிட்டார்.