மியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை, செக் நாட்டின் இளம் வீரர் ஜாகுப் மென்சிக் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் மியாமி நகரில் நடந்து வந்தன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவை சேர்ந்த உலகின் 5ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (38), செக் குடியரசு நாட்டை சேர்ந்த 19 வயது இளம் வீரர் ஜாகுப் மென்சிக் உடன் மோதினார்.
ஏற்கனவே 99 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், 100வது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் கடுமையாக போராடினார். இருவரும் ஆக்ரோஷமாக விட்டுக் கொடுக்காமல் மோதியதால், இரு செட்களும் டைபிரேக்கர் வரை சென்றன. இரு செட்களையும், 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் மென்சிக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றார். இதனால், 100வது பட்டத்தை வெல்லும் கனவு, ஜோகோவிச்சிற்கு மெய்ப்படவில்லை.
சாம்பியன் பட்டம் வென்ற மென்சிக்கிற்கு, ரூ.9.6 கோடியும், பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது. போராடித் தோற்று 2ம் இடம் பிடித்த ஜோகோவிச் ரூ.5.1 கோடி பரிசுத் தொகை பெற்றார்.


