திருவொற்றியூர்: திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில் உள்ள தூண்டில் வளைவு பாறைகளுக்கு நடுவே, கடந்த 11ம் தேதி, பெண் சடலம் மிதந்தது. இதை பார்த்த மீனவர்கள் உடனடியாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, மீனவர்கள் உதவியுடன் அந்த பெண்ணின் உடலை பைபர் படகு மூலம் கரைக்கு கொண்டுவந்து, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அயனாவரம் ஐ.சி.எப் காலனியை மணிமேகலை (46) என்பது தெரிந்தது. இவரது கணவர் சிவகுமார், ஐசிஎப்பில் பணிபுரிந்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால், அவரது வேலை மனைவியான மணிமேகலைக்கு கிடைத்துள்ளது. இவர், டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர் எதற்காக திருவொற்றியூர் குப்பத்திற்கு வந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து அவர்களது உறவினர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.