பெரம்பூர்: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள 15 பகுதி அலுவலகங்களில், ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. குடிநீர், கழிவுநீர் பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் மனுக்கள் வாயிலாகவும், நேரிலும் வந்து தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
அதன்படி, சென்னை திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட திருவிக நகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் பெரம்பூரில் குறைதீர் முகாம், மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில், பகுதி பொறியாளர் பாக்கியலட்சுமி, துணை பகுதி பொறியாளர் சுரேஷ்குமார், முதுநிலை கணக்கு அலுவலர் பாக்கியா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில், பெரம்பூர், திரு.வி.க நகர் மண்டலத்தில் உள்ள பொதுமக்கள் பங்கேற்று, புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு மற்றும் வரி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டனர்.