திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மேப்பலம் பகுதியில் நடைபெறும் ஓஎன்ஜிசி பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 45 வருடங்களாக ஓஎன்ஜிசி நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் அருகே உள்ள பெறுந்தரைக்குடி ஊராட்சிக்குட்பட்ட மேப்பலம் என்ற இடத்தில் கடந்த 1996ம் ஆண்டு முதல் கச்சா எண்ணெய் எடுத்துவந்த நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின் பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் மேப்பலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 3 நாட்களாக பணிகளை தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேப்பலம் பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறார்களா? என சந்தேகம் எழுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். என்ன பணி நடக்கிறது என்பதை மாவட்ட நிர்வாகமும், ஓஎன்ஜிசி அதிகாரிகளும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனம், பராமரிப்பு பணிகளே நடைபெறுவதாகவும், புதிய பணி எதுவும் நடைபெறவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.