* குவிண்டால் ரூ7,239 விலை போனது
* மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
அறுவடை செய்யப்படும் பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நடப்பா ண்டில் இதற்கான கொள்முதல் ஏலம் என்பது கடந்த ஜுன் மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
திருவாரூர்: திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிக பட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 7 ஆயிரத்து 239 விலை கிடைத்த நிலையில் ஒரே நாளில் ரூ ஒரு கோடியே 20 லட்சம் அளவில் ஏலம் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அத ற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறினர். அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பருத்தி பயிருக்கு கடந்தாண்டில் நல்ல விலை கிடைத்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இருமடங்கு அளவில் அதாவது 41 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பயிர்கள் அனைத்தும் கடந்த 2 மாத காலமாக அறுவடை நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அறுவடை செய்யப்படும் பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நடப்பா ண்டில் இதற்கான கொள்முதல் ஏலம் என்பது கடந்த ஜுன் மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகளிடமிருந்து ஆயிரத்து 302 குவிண்டால் அளவில் பருத்தியினை வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 7 ஆயிரத்து 239ம், குறைந்தபட்சமாக ரூ 6 ஆயிரத்து 700ம், சராசரியாக ரூ 7 ஆயிரத்து 15ம் விலை கிடைத்தாகவும், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ ஒரு கோடியே 20 லட்சத்து 30 ஆயிரத்து 487 மதிப்பில் ஏலம் நடைபெற்றுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் எவ்வித இடைத்தரகர்களும் இல்லை. இதனால் விவசாயிகள் பருத்தியை நன்கு காய வைத்து ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்வதன் மூலம் விவசாயிகளுக்கு ஏலம் உடனடியாக நடைபெற்று பயன் கிடைக்கும் என்று திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.