திருவாரூர், நவ. 7: திருவாரூர் ஒன்றியத்தில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு உரிய கூலியை வழங்காமல் ரூ. 2 ஆயிரத்து 696 கோடி அளவில் நிலுவைத் தொகை வைத்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், பெரு நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் கோடி அளவில் கடன் தள்ளுபடி செய்துள்ளதை கண்டித்தும், மகாத்மா காந்தி வேலை திட்ட தொழிலாளர்களுக்கான நிலுவை கூலியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரியும் திருவாரூர் ஒன்றியத்தில் நேற்று தப்பலாம்புலியூர், திருப்பத்தூர், மாவூர் ஆகிய இடங்களில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் கலியபெருமாள் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் ராஜாங்கம் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் இடும்பையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோமதி, பொறுப்பாளர்கள் மாதவன், சுந்தரய்யா, சேகர், கோசிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.