* விதைகள், உரங்கள் 100% மானியத்தில் வழங்கப்பட்டது
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.தமிழகத்தின் உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
இதில் குறிப்பாக நெல் உற்பத்தியானது 90 சதவிகித அளவில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா என ஆண்டுஒன்றுக்கு மொத்தம் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்தாண்டில் அரசு சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருள்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன.
இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டனர்.
இதனையொட்டி நடப்பு காரீப் (2024&25) பருவத்திற்காக கடந்தாண்டு செப்டம்பர் 1ந் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 173 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 93 ஆயிரத்து 986 மெ.டன் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்குரிய தொகை ரூ.210 கோடியானது 21 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
அதன்பின்னர் சம்பா சாகுபடியானது நடைபெற்று பின்னர் அறுவடை பணிகள் நடைபெற்ற நிலையில் நெல் கொள்முதலுக்காக மாவட்டம் முழுவதும் 538 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 1ந் தேதி முதல் நடைபெற்றது. அதன்படி மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்காக ஓரு லட்சத்து 31 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.1270 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டில் கோடை நெல் சாகுபடியானது கடந்த மார்ச் மாதம் துவங்கி 30 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது இந்த பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் இதற்காக 157 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை சுமார் 55 ஆயிரத்து 83 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதன் மூலம் 10 ஆயிரத்து 32 விவசாயிகள் பயனடைந்துள்ள நிலையில் அவர்களின் வங்கி கணக்கில் ரூ 151 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.