*போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் முடிவு
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலைய போலீசார் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு விஷம் கலந்த கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (67) இவருக்கு சொந்தமான 200 குலி நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பக்கிரிசாமியிடம் நடராஜன் கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பயன் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த மூன்று வருடமாக திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திலும் எஸ்பி அலுவலகத்திலும் தொடர்ச்சியாக புகார் கொடுத்த நிலையில் அந்த புகார் மனுக்களை முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரிக்க சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால் அந்த மனுக்களை பெற்றுக் கொண்டு சரிவர விசாரிக்காமல் முத்துப்பேட்டை காவல் நிலைய போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லையே மன நெருக்கடிக்கு உள்ளான நடராஜன் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கூல்ட்ரிங்ஸ் பாட்டிலில் குருணை மருந்து கலந்து மனுவை கொடுத்துவிட்டு கலெக்டர் முன்னிலையில் விஷம் குடிக்க முடிவு செய்து எடுத்து வந்தார்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் மனு கொடுக்க வந்தவர்களை சோதனை செய்யும் இடத்தில் முதியவர் நடராஜன் விஷம் கலந்த குருணை மருந்து பாட்டில் மற்றும் கோரிக்கை மனுவுடன் வந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் இருந்து விஷம் கலந்த மது பாட்டிலை கைப்பற்றினர்.
பின்னர் உரிய அறிவுரை கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை மட்டும் கொடுக்குமாறும் இந்த முறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து சமாதானம் அடைந்த முதியவர் நடராஜன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.