திருவாரூர், நவ. 11: திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழையானது நேற்று அதிகாலை வரையில் கன மழையாக பெய்தது. இதன் காரணமாக திருவாரூர் நகரில் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. மேலும் மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் சாகுபடி பணிகளையொட்டி களை எடுப்பது, பூச்சி மருந்து தெளித்தல், அடி உரமிடுவது போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த மழை காரணமாக மாவட்டத்தில் நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் சாரு உத்திரவிட்டார். மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ ல் வருமாறு திருவாரூர் 33.2, நன்னிலம் 66.2, குடவாசல் 23.4, வலங்கைமான் 15.8, மன்னார்குடி 9, நீடாமங்கலம் 54.4, பாண்டவையாறுதலைப்பு 13.4 மற்றும் திருத்துறைப்பூண்டி 13.2 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 228.6 மி.மீ மழையும் சராசரியாக 25.4 மி.மீ மழையும் பெய்துள்ளது. மேலும் நேற்றும் பகல் நேரத்திலும் திருவாரூர், குடவாசல், திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் மொத்தம் 6.9 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.