திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையின் 13 நாளான திரயோதசி திதியன்று நடைபெறும் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புக்குரியது. அதன்படி, பவுர்ணமி பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடந்தது. அதையொட்டி, பிரதோஷ காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அண்ணாமலையார் கோயிலில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்திக்கு விபூதி, மஞ்சள், பால் தயிர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது, சிறப்பு அலங்காரத்தில் நந்திபகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும், கோயில் 3ம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், அண்ணாமலையார் கோயிலில் அமைந்துள்ள மற்ற நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.