Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் நாளை ஏற்றப்படுகிறது: 4,500 கிலோ நெய், திரி, தீபகொப்பரை தயார்; மலையேற தடை: 15,000 போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் வண்ண விளக்குகள், மலர் அலங்காரங்களால் கயிலாயம் போல காட்சியளிக்கிறது. மகா தீபத்திருவிழாவை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையிலள் குவிந்துள்ளனர். இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீப பெருவிழா நாளை (3ம் தேதி) நடைபெற உள்ளது.

அதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். மகாதீபம் ஏற்றுவதற்காக, 4,500 கிலோ முதல் தர தூய நெய் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டு, திருக்கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மகாதீபம் ஏற்றுவதற்கான ஐந்தரை அடி உயரம் கொண்ட செப்பினால் உருவான மகா தீப கொப்பரை வண்ணம் தீட்டப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர் உருவத்துடன் தயார் நிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மகா தீபம் ஏற்றுவதற்காக 1,500 மீட்டர் துணி திரி, உபயதாரர்கள் மூலம் நேற்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. முன்னதாக, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் வைத்து மகாதீப திரிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை, திருப்பணியாளர்கள் தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டு செல்வார்கள்.

அதைத்தொடர்ந்து, மலை உச்சியில் நிலை நிறுத்தப்படும் மகாதீப கொப்பரைக்கு பாரம்பரிய வழக்கப்படி, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். பின்னர், நெய் மற்றும் திரி ஆகியவை நாளை மலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு, இந்த ஆண்டும் மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வல்லுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தீபத்திருவிழாவின் போது, மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவை தரிசிக்க இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையில், 5 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வரும் 5ம் தேதி வரை செயல்படும்.

* திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஐகோர்ட் அனுமதி

மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம.ரவிக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் தீபம் ஏற்றாமல், பிள்ளையார் கோயிலில் உள்ள தீப மண்டபத்தில் தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதுடன், அதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.