திருவண்ணாமலை: திருவண்ணாமலை சென்ற ஆளுநருக்கு எதிர்க்கட்சியினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை திருவண்ணாமலை வந்தார். அங்கு கிரிவலப்பாதையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘உலகின் மற்ற நாடுகளைப்போல நம் நாடு இல்லை. அவையெல்லாம் ராணுவ பலத்தால், அதிகார பலத்தால் கட்டமைக்கப்பட்டது. ஆனால், நம் நாடு அது போன்றதில்லை. பல ராஜ்ஜியங்களாக இருந்தது. இப்போது ஒரே நாடாக பாரத நாடாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து, மக்களை சந்திக்கிறேன். தமிழ்நாடு ஆன்மிகத்தின் தலைநகரமாகும்’ என்றார். பின்னர் மாலையில் ஆளுநர் ரவி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்துக்கு காரில் சென்றார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் , மதிமுக, வி.சி, மனித நேய மக்கள் கட்சி சார்பில், ஆசிரமம் எதிரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பெண்கள் குறித்து அவதூறு பரப்பியும், அறிவியலுக்கு எதிராக சனாதனம் பேசியும் மத வெறியை தூண்டும் வகையில் பேசிவரும் ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என்ற பாதாகையை ஏந்தியபடி கண்டன முழக்கமிட்டனர். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.