திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று வரிசையில் முந்தி செல்ல முயன்றதில் தெலங்கானா பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரது மண்டை உடைந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கடந்த 2 நாட்களாக பக்தர்களின் வருகை வெகுவாக உயர்ந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும்போதே பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் மாடவீதி வரை கூட்டம் நீண்டிருந்தது.
சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்தனர். நேற்று வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்த நிலையிலும், அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதனால் பல இடங்களிலும் கடும் வாக்குவாதமும், பக்தர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இந்நிலையில் அம்மன் கோபுரம் நுழைவாயில் பகுதியில் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த பக்தர்கள் திடீரென முண்டியடித்து கொண்டு கோயிலுக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் பின்னர் கைகலப்பானது. இதில் இருதரப்பை சேர்ந்த பக்தர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது, ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் சொட்டியது. அவருடன் வந்திருந்த பெண்கள் கதறி அழுது கூச்சலிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். பின்னர், தகராறில் ஈடுபட்டவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.