*கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நேற்று நடந்த உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதிவரை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தாய்ப்பால் அவசியத்தை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி சார்பில் நேற்று உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு, மருத்துவ இயக்குநர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார். விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பா.முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், ஊர்வலத்தில் மாணவர்களுடன் இணைந்து முக்கிய சாலைகள் வழியாக நடந்து சென்றார்.
அதைத்தொடர்ந்து, கலெக்டர் முருகேஷ் தெரிவித்ததாவது:குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், அருணை மருத்துவக்கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்துள்ள விழிப்புணர்வு ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றுள்ளனர். உழைக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பணிபுரியும் இடங்களில் தாய்பால் புகட்டுவதற்கான வசதிகளை, சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்படுத்தித்தர வேண்டும். தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர். மேலும், இயல்பான பிரவசவத்தில் குழந்தைகள் பிறந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் புகட்ட வேண்டும்.
அறுவை சிகிச்சையில் பிறந்த குழந்தைகளுக்கு 2 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் புகட்ட வேண்டும். தமிழ்நாட்டில் அரசு பணிக்கு செல்லும் பெண்களுக்கு, மகப்பேறு விடுமுறை ஏற்கனவே 9 மாதமாக இருந்ததை ஒரு ஆண்டாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குழந்தைக்கு கட்டாயமாக குறைந்த பட்சம் ஆறு மாத காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
மேலும், தாய்மார்கள் பணிக்கு செல்வதை காரணம் காட்டி, தாய்ப்பால் புகட்டாமல் இருப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், அருணை மருத்துவக்கல்லூரி முதல்வர் டி.குணசிங், மருத்துவ கண்காணிப்பாளர் பி.குப்புராஜ், மற்றும் சேஷாத்திரி, தாசில்தார் சரளா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.