திருவண்ணாமலை: வைகாசி மாத பவுர்ணமியான இன்று பகல் 12.32 மணிக்கு தொடங்கி, நாளை பகல் 1.58 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்தது என திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12.32 மணிக்கு பவுர்ணமி திதி தொடங்கினாலும், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இன்று அதிகாலை முதல் இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தொடர்ச்சியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், மோர், கடலை மிட்டாய், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டன. தரிசன வரிசை அமைந்த இடங்களில் தற்காலிக நிழற்பந்தல் வசதி செய்யப்பட்டிருந்தது.
அதேபோல் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மதியத்திற்கு பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது.
மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து காட்பாடி, விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.