சென்னை: திருவண்ணாமலை கோயில் தாமரை குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் குளமான தாமரை குளத்தின் நான்கு பக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் இருந்து மனித கழிவுகள் உள்ளிட்டவை குளத்தில் திறந்து விடப்படுவதாக கூறி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமைநீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அரசு கண்டறிந்து 46 வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை கண்காணிப்பதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை நியமித்தும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகள் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளனர்.