திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல வரும் 10ம் தேதி இரவு உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் தரிசனத்துக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.திருவண்ணாமலையில் அண்ணாமலையாரே மலை வடிவாக எழுந்தருளியிருப்பதால், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி வரும் 10ம் தேதி பகல் 12.32 மணிக்கு தொடங்கி, 11ம் தேதி பகல் 1.58 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே, 10ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.சமீபகாலமாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, கடந்த மாதம் கோடை விடுமுறை காலம் என்பதால், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநில பக்தர்கள் வருகையால் திருவண்ணாமலை நகரம் திணறியது. இந்நிலையில், இந்த மாத பவுர்ணமிக்கும் பக்தர்கள் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதையொட்டி, கிரிவல பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் விரிவாக செய்ய மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் திட்டமிட்டுள்ளன. மேலும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வழக்கம் போல சென்னையில் இரந்து பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.