*கலெக்டர் ஆய்வு: அடுத்த மாதத்திற்குள் பணிகள் முடிக்க உத்தரவு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாட வீதியில் நவீன தரத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அடுத்த மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணியின் முதற்கட்டமாக, பே கோபுர வீதி மற்றும் பெரிய தெரு பகுதியில் சுமார் 1 கி.மீ தூரம் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
அதன்தொடர்ச்சியாக, தேரடி வீதியில் காந்தி சிலை தொடங்கி திருவூடல் தெரு, திரவுபதி அம்மன் கோயில் சந்திப்பு வரை தார் சாலையை அகற்றிவிட்டு நவீன தரத்தில் 1.07 கி.மீ தூரம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.இப்பணியை சமீபத்தில் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதையொட்டி, இரவு பகலாக பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். காந்தி சிலை சந்திப்பு தொடங்கி, திரவுபதி அம்மன் கோயில் வரை ஆய்வு பணியை மேற்கொண்ட கலெக்டர், பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் திட்டமிட்டபடி விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
மேலும், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை விரைந்து நிரப்பிட வேண்டும். அந்த பகுதியில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, டிஆர்ஓ ராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.