திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ₹70 லட்சம் கடனை வசூலிப்பதற்காக நகைக்கடை உரிமையாளரின் 2 மகன்கள் காரில் கடத்தப்பட்டனர். அவர்களை ஒன்றரை மணி நேரத்தில் மீட்ட போலீசார், பெங்களூரு கூலிப்படையினர் உட்பட 5 பேரை கைது செய்தனர். திருவண்ணாமலை அசலியம்மன் கோயில் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் நரேந்திரகுமார். அவரது மகன்கள் ஜித்தேஷ்(27), ஹரிசந்த்(25). நகை வியாபாரம் தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த வேறொரு நகை அடகு கடைக்காரரிடம், இவர்கள் இருவரும் ₹70 லட்சம் கடன் வாங்கினார்களாம். ஆனால், கடனை திரும்ப தராமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஜித்தேஷ், ஹரிசந்த் இருவரும் தங்களது நகைக்கடையை பூட்டிவிட்டு ஐயங்குள தெரு வழியாக சென்றுள்ளனர். அப்போது, அவர்களை வழிமறித்து முகவரி கேட்பதுபோல சிலர் நடித்துள்ளனர். முகவரியை சொல்வதற்காக பைக்கை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தபோது, இருவரையும் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச்சென்று, அருகில் நிறுத்தி இருந்த காரில் கடத்திக்கொண்டு அந்த கும்பல் தப்பியது.
தொடர்ந்து, திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் காரை நிறுத்தியுள்ளனர். பின்னர், அண்ணன், தம்பி இருவரையும் அவர்களுடைய குடும்பத்தினருடன் செல்போனில் பேச வைத்துள்ளனர். ₹70 லட்சம் பணத்தை கொடுத்தால்தான் விடுவிப்போம் என மிரட்டியுள்ளனர். அதைத்தொடர்ந்து, உடனடியாக அவர்களது குடும்பத்தினர் ₹10 லட்சம் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். உடனே 2 பேரையும் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டுவிட்டு அந்த மர்ம கும்பல் காரில் தப்பியது.
இதையடுத்து, நகைக்கடை உரிமையாளர் நரேந்திரகுமார் தன்னுடைய மகன்கள் கடத்தப்பட்டதையும், பின்னர் ₹10 லட்சம் கொடுத்து மீட்டதையும் திருவண்ணாமலை போலீசுக்கு தெரிவித்தார். உடனடியாக விரைந்து செயல்பட்ட போலீசார், ஐயங்குள தெருவில் கடத்தல் சம்பவம் நடந்தபோது சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட காரின் அடையாளங்களை வைத்து, மாவட்டம் முழுவதும் இரவு விடிய, விடிய சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, திருவண்ணாமலை- பெங்களூரு நெடுஞ்சாலையில் மேல்செங்கம் அருகே சம்பந்தப்பட்ட காரை நள்ளிரவில் மடக்கினர். தொடர்ந்து, காரில் இருந்து தப்பிக்க முயன்ற 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ₹10 லட்சம் மற்றும் சொகுசு கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. ஒன்றரை மணி நேரத்தில் கடத்தப்பட்ட இருவரையும் மீட்டனர்.
பிடிபட்டவர்களில் 3 பேர் பெங்களூருவை சேர்ந்த பிரபல ரவுடி கும்பலை சேர்ந்த கூலிப்படையினர் என்பதும், ஒருவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கடத்தலுக்கு காரணமான திருவண்ணாமலையை சேர்ந்த நகை அடகு கடைக்காரரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த கடத்தலில் மேலும் 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில நாட்களாக திட்டமிட்டு இந்த கடத்தலை அரங்கேற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையை பல்வேறு கோணங்களில் நடத்தி வருகின்றனர்.