*கலெக்டர் முழு உடல் தானம் செய்தார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக ரத்த கொடையாளர் தின விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் தர்ப்பகராஜ் பேசியதாவது:
இன்றைக்கு ஏற்றதாழ்வு இல்லாமல் குருதி தானம் வழங்கப்படுகிறது. மருத்துவ உலகில் உருவாகியுள்ள கொடை சார்ந்த குருதி மற்றும் உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் சமுகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு நூற்றாண்டுக்கு முன், மருத்துவ கல்வி பெண்களுக்கு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், இப்போது மருத்துவ துறையில் பெண்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். ஏராளமான பெண் மருத்துவர்கள் உருவாகி வருகின்றார்கள்.இவைதான் அறிவியல் மற்றும் மருத்துவ முன்னேற்றத்திற்கான சான்றுகளாகும்.
குருதி தானம் மிகச்சிறந்த தானமாகும். நாம் தானமாக அளிக்கும் ரத்தம் எண்ணற்ற மனித உயிர்களை காப்பற்றும். மேலும், ரத்ததானம் செய்வதால் நமது உடலுக்கும் நன்மை ஏற்படும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எனவே, நம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை ரத்த தானம் வழங்க ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து, கலெக்டர் தலைமையில் உலக குருதி கொடையாளர் தின உறுதி மொழியை அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள் தன்னார்வலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உடல் உறுப்பு மற்றும் முழு உடல் சிறப்பு தான முகாமை பார்வையிட்ட கலெக்டர் தர்ப்பகராஜ், முழு உடல் தானம் வழங்க விருப்பம் தெரிவித்து அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு அளித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கலெக்டர் திடீரென முழு உடல் தானம் வழங்கியது வியப்பை ஏற்படுத்தியதுடன், அனைவரது பாராட்டையும் பெறுவதாக அமைந்தது. மேலும், முழு உடல் தானம் வழங்கிய கலெக்டர் தர்ப்பகராஜுக்கு, அதற்கான சான்றை கல்லூரி முதல்வர் ஹரிகரன் வழங்கினார். மேலும், ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கான அவரச சிகிச்சை மற்றும் முதலுதவி பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.நிகழ்ச்சியில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஹரிகரன், கண்காணிப் பாளர் மாலதி மற்றும் அரசு மருத்துவர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.