Saturday, February 24, 2024
Home » திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹6.62 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள்

திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹6.62 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள்

by Lakshmipathi

*கலெக்டர் வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில், ரூ.6.62 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமையன்று, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் உதவி உபகரணங்கள் வழங்கவும், அடையாள அட்டைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, வாராந்திர சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அதில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த முகாமில், 437 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டார். மேலும், வரிசையில் காத்திருந்து மனுக்களை அளிப்பதில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படும் என்பதால், அனைவருக்கும் இருக்கை வசதிகள் ஏற்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, இருக்கை வசதிகள் செய்யப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிடம் இருந்து பெறப்பட்டகோரிக்கை மனுக்களின் அடிப்படையில், நேற்று ஒரே நாளில் 285 பேருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அதோடு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.6.52 லட்சம் மதிப்பில் 8 நபர்களுக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. அதேபோல், ஒரு நபருக்கு ரூ.9,600 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. 6 நபர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. அதேபோல், 37 நபர்களுக்கு பஸ் பயண சலுகை அட்டையும், 25 நபர்களுக்கு ரயில் பயண சலுகை அட்டையும் வழங்கப்பட்டது. இவற்றை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். சுய தொழில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்த 47 பேரின் மனுக்களை சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.

மேலும், உதவி உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள மாற்றத்திறனாளிகளுக்கு, உரிய மருத்துவ பரிந்துரை அடிப்படையில் அவற்றை விரைந்து வழங்கவும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கோரும் மனுக்கள் மீது துறைசார்ந்த அதிகாரிகளின் கள ஆய்வு விசாரணை அறிக்கை அடிப்படையில் தாமதமின்றி உதவி வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, டிஆர்ஓ பிரியதர்ஷினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் மதிய உணவு வழங்க ஏற்பாடு: திருவண்ணாமலையில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், மதிய உணவு வழங்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலையில் புறப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள், மீண்டும் வீடு திரும்ப நேரமாகும் என்பதால், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உணவகங்களை தேடிச்சென்று சாப்பிடுவது மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சிரமமாக இருக்கும் என்பதால், முசுாம் நடைபெறும் இடத்திலேயே, ஒவ்வொரு வாரமும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும் என குறிப்பிட்டார்.

அதோடு, மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து, கலெக்டர் மற்றும் டிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகளும் மதிய உணவை சாப்பிட்டனர். அதனால், மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். கடந்த 2020ம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்க, தன்னார்வலர்களின் பங்களிப்புடன் இறைவனின் சமையலறை எனும் முயற்சியை அப்போதைய கலெக்டர் கந்தசாமி மேற்கொண்டார்.

முகாம் நடைபெறும் இடத்திலேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது. ஆனால், அவரது மாறுதலுக்கு பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு முகாமில் மீண்டும் மதிய உணவு வழங்கும் முயற்சியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

sixteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi