*கலெக்டர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கல்வி கடன் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. எனவே முன்னேற்பாடுகளை கலெக்டர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக்கல்லூரி என 31 கல்லூரிகள் உள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டத்தில் படிக்கும் இந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவதற்காக கல்வி கடன் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை கல்வி கடன் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்வி கடன் வழங்க தகுதி பெற்ற அனைத்து வங்கி அதிகாரிகளும் கலந்து கொண்டு, கல்விக்கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை பெற்று உடனுக்குடன் பரிசீலனை செய்ய உள்ளனர்.
இந்த முகாமில் கலந்து கொள்ள வசதியாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் இருந்தும் முகாம் நடைபெறும் இடத்துக்கு சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர்கள் https://www.vidyalakshmi.co.in என்ற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்காக, முகாம் நடைபெறும் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவியர்களுக்கு தனி தனியே பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெறும் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தை நேற்று மாலை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, முகாமிற்கு வரும் மாணவர்கள் பயன்பெறுவதற்காக ஒவ்வொரு வங்கிகளுக்கும் தனித்தனியே அரங்குகள் அமைக்கவும், மாணவர்களுக்கு வழி காட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வில், திருவண்ணாமலை ஆர்டிஓ மந்தாகினி, முன்னோடி வங்கி மேலாளர் கவுரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.