திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சர்வர், கணினி உள்பட ₹5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. சில பகுதிகளில் தொலைதொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று மாலை பணிகள் முடிந்த பின்னர் அலுவலகத்தை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். செக்யூரிட்டி மட்டும் பணியில் இருந்தார். நள்ளிரவு 12.30 மணியளவில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த செக்யூரிட்டி, திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அலுவலகத்தில் உள்ள கணினிகள், சர்வர், ஏசி உள்ளிட்ட சுமார் ₹5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள கட்டடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தகவலறிந்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் யுபிஎஸ் சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலுவலகத்தில் உள்ள கணினிகள், சர்வர் மற்றும் மின்சாதன பொருட்கள் தீயில் கருகியதால் திருவண்ணாமலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.